அப்போது அவர்: விதையைப் பிறப்பிக்கும் பசும் புற்பூண்டுகளையும், பூமியின் மீது தம்மிடம் விதைகளைக் கொண்டுள்ள கனிகளைத் தத்தம் இனத்தின்படியே தரும் மரங்களையும் பூமி முளைப்பிக்கக்கடவது என்றார்.
அதுவும் அப்படியே ஆயிற்று. பூமி தத்தம் இனத்தின்படியே தத்தம் விதையைப் பிறப்பிக்கும் புற்பூண்டுகளையும், தத்தம் இனத்தின்படி தம்மிடம் விதைகளைக் கொண்டுள்ள மரங்களையும் முளைப்பித்தது. கடவுள் அதுவும் நல்லதென்று கண்டார்.
அப்போது கடவுள் திமிங்கிலங்களையும், உயிரும் அசைவும் உடையனவாய் நீர்திரளில் உற்பத்தியாகிய வகை வகையான பிராணிகள், வித விதமான பறவைகள் எல்லாவற்றையும் படைத்தார். கடவுள் அதுவும் நல்லதென்று கண்டர்.
பின்னர் கடவுள்: நமது சாயலாகவும் பாவனையாகவும் மனிதனைப் படைப்போமாக; அவன் கடல் மீன்களையும், வானத்துப் பறவைகளையும், மிருகங்களையும், பூமி முழுவதையும், பூமியின் மீது அசைவன ஊர்வன யாவற்றையும் ஆளக்கடவன் என்றார்.
கடவுள் அவர்களை ஆசீர்வதித்து, நீங்கள் பலுகிப் பெருகிப் பூமியை நிரப்பி அதனைக் கீழ்ப்படுத்துங்கள்; கடல் மீன்களையும், வானத்துப் பறவைகளையும், பூமியின் மீது அசைந்து உலாவும் உயிரினங்கள் அனைத்தையும் ஆண்டு கொள்ளுங்கள் என்றார்.
மேலும் கடவுள்: இதோ பூமியின் மீது விதை தரும் புற்பூண்டுகள் எல்லாவற்றையும், தத்தம் இனத்தின்படி தம் விதைகளைக் கொண்டிருக்கும் விதவிதமான மரங்களையும் உங்களுக்கு உணவாகத் தந்துள்ளோம்;
மேலும், பூமியில் உயிர் வாழும் விலங்குகள் வானத்தில் பறக்கும் பறவைகள், உயிரோடு பூமியில் அசையும் எல்லாவற்றிக்கும் அதே புற்பூண்டுகளை உணவாகக் கொடுத்தோம் என்றார். அதுவும் அப்படியே ஆயிற்று.